HISTORY OF THIRUKOVILUR

Monday, November 14, 2011

த்ரிவிக்ரம அவதாரம்

                              
      முன்னொரு காலத்தில் 'மஹாபலி' என்று புகழ் பெற்ற அஸுரன் ஒருவன் இருந்தான். அவன் தான, தர்மங்களில் மிகவும் சிறந்தவனாக இருந்த போதிலும் தேவர்களை மிகவும் கஷ்டப்படுத்திக் கொண்டிருந்தான். அவனது கொடுமையைத் தாங்காது தேவர்கள், ஸித்தர்கள், முனிவர்கள் யாவரும் திருப்பாற்கடலையடைந்து பகவானை சரணடைந்தனர். அப்பொழுது ஸ்ரீமந் நாராயணன் அவர்களுக்குப் ப்ரத்யக்ஷமாகி மஹாபலியை அடக்குவதாக வாக்களித்து அபயங் கொடுத்து மறைந்து விட்டார். அந்த ஸமயத்தில் கச்யபர் தனது பார்யையான (மனைவி) அதிதியுடன் புத்ரன் வேண்டுமென்று புத்ரகாமேஷ்டி செய்தார். அப்பொழுது யக்ஞ புருஷனான நாராயணன் வாமன மூர்த்தியாக அவதரித்தான். வாமன பகவான் ப்ரம்மசர்ய ஆச்ரமம் பெற்றதும் பலிச் சக்ரவர்த்தியிடம் பூதானம் வேண்டி வந்து சேர்ந்தான். இவ்வுலகை படைத்த ஸர்வேஸ்வரனே வாமன ரூபியாக வந்திருக்கிறான் என்று அறியாத பலிச்சக்ரவர்த்தி அவருக்கு விசேஷமாக பூஜை செய்து எது வேண்டுமானலும் தானம் செய்வதாக வாக்களித்தான். அது கேட்டு உள்ள முகந்த எம்பெருமான், "அப்படியாகில் என் திருவடிகளால் மூன்றடி மண் கொடு" என்று கேட்டான்.   

        வாமன மூர்த்தியான ஹரியின் கபடத்தைக் கண்ட சுக்ராச்சாரியார் தனது சிஷ்யனான மஹாபலியிடமுள்ள பரிவினால் வந்திருப்பது ப்ராமணன்ல்ல மாயா ப்ரம்ம சாரியான விஷ்ணு வேதான் என்று சொல்லிக் காட்டிக் கொடுத்து விட்டார். ஆனால் தைர்யசாலியான பலியோ ஸாக்ஷாத் திருமகள் கேள்வனான நாராயணனே என்னிடம் கை நீட்டி தானம் வாங்குவது எனக்குப் பெருமையே, என்னிடம் தானமும்பெற்றுக் கொண்டு என்னை நிக்ரஹம் செய்தாலும் அல்லது அனுக்ரஹம் செய்தாலும் சொன்ன சொல் மீற மாட்டேன் என்று சொல்லி குருவை மீறி பகவானுக்கு மூன்றடி மண் தானம் செய்து விட்டான். 
       
         அப்பொழுது பகவான் உடனே வாமன ரூபத்தை விட்டு விராட் புருஷ ரூபத்தை எடுத்துக் கொண்டு ஒரு திருவடியால் பூமியையும், மற்றொரு திருவடியால் விண்ணுலகையும் அளந்தான். அப்பொழுது த்ரிவிக்ரம ரூபத்தைக் கண்ட தேவர்கள், முனிவர்கள், ஸித்தர்கள், கின்னரர்கள் யாவரும் பலவாறு துதித்துக் கொண்டாடினார்கள். ப்ரம்ம தேவனும் உயரத்தூக்கப்பட்ட திருவடியில் தனது கமண்டலுவிலுள்ள தீர்த்தத்தினால் பாத்யம் கொடுத்து பூஜித்தார். அந்த பாத்ய தீர்த்தமே கங்கையென்னும் பெயருடன் உலகில் பெருகி ஓடுகிறது.
      
        மூன்று அடி தருவதாகச் சொன்ன மஹாபலியின் சொல்படி பூலோகத்தையும் ஸ்வர்க்கத்தையும் இரண்டு அடிகளாக அளந்து விட்டபடியால் மூன்றாவது அடி எங்கே என்று கேட்டு பகவான் மஹாபலியை அதட்டினான். பகவான் பெருமையை அறிந்த மஹாபலி, "நாராயணா" எனது ஸத்யத்தைக் காப்பாற்ற வேண்டியது உமது கடமை. உமது திருவடியால் அடியேனது தலையை அளந்து கொண்டு என் உடைமை யாவையும் உமதாக ஏற்றுக் கொண்டது போல் அடியேனையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டினான். உடனே பகவானும் மஹாபலியின் தலை மேல் தனது திருவடியை வைத்து அனுக்ரஹித்து இரண்டு லோகமும் எனக்கு தானம் கொடுத்து விட்டபடியானதினால் இனி இங்கு இருக்ககூடாது. பாதாளத்திற்க்குப் போ வென்று சொல்லி அனுப்பினான். அவனிடம் கருணையுடன் பகவானும் அவன் பாதாளத்தில் இருக்குமிடத்தில் தானே வாசற்காப்பாளனாக இருந்து அவனுக்குக் காக்ஷியளிக்கிறான்.
   
       தேவர்கள், முனிவர்கள் யாவரும் தங்கள் காரியம் பலித்துவிட்ட படியால் பகவானைத் துதித்தனர். இந்திரனிடம் மூவுலக ராஜ்யத்தையும் கொடுத்து விட்டு சங்க, சக்ர தாரியான பகவான் யாவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மறைந்து விட்டார்.

Wednesday, October 19, 2011

ஸ்தல விசேஷம்


மூலவர்    பெருமாள்         : உலகளந்த (த்ரிவிக்ரமன்) பெருமாள்,
உத்ஸவர் பெருமாள்        : ஸ்ரீ தேஹளீசன் (ஆயனார்),
மூலவர்     தாயார்              : பூங்கோவல் நாச்சியார்,
உத்ஸவர்  தாயார்             : ஸ்ரீ புஷ்பவல்லி தாயார்,
விமானம்                              : ஸ்ரீ கர விமானம்,
தீர்த்தம்                                  : பெண்ணையாறு, க்ருஷ்ண, சுக்ர தீர்த்தம்,                ஸ்தல வ்ருக்ஷம்               : புன்னை மரம்,
ப்ரத்யக்ஷம்                          : மஹாபலி, ம்ருகண்டு முனிவர், ப்ரம்மா, இந்திரன்,
                                                  : குக்ஷி, காச்யபர், பொய்கையாழ்வார்,
                                                  : பூதத்தாழ்வார், பேயாழ்வார்.
திருவாரதனம்                    : ஸ்ரீ வைகானஸ பகவத் சாஸ்த்ரம்,
ஸம்ப்ரதாயம்                    : தென்கலை,
நிர்வாகம்                             : ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் மடாதிபதிகள்.     

Tuesday, September 20, 2011

திருக்கோவிலூர் திவ்யதேசம்

   திருக்கோவலூர் என அழைக்கப்படும் இந்த க்ஷேத்திரம், பஞ்ச க்ருஷ்ணாரணய க்ஷேத்திரங்களுள் ஒன்றாகும். கோபாலபுரம் மற்றும் கோபகிரி என்ற பெயர்களும் உண்டு. நாலாயிர திவ்ய ப்ரபந்தம் எனப்படும் திராவிட வேதம் இங்கு தான் முதன் முதலில் முதலாழ்வார்களால் பாடப்பெற்று ஆரம்பிக்கப்பட்டதால், இந்த க்ஷேத்திரம் திவ்ய ப்ரபந்த அவதார ஸ்தலம் எனப்புகழ் பெற்றது. 108 வைணவ திவ்ய தேசங்களில் 42வது திவ்யதேசமாகும். நடு நாட்டு திவ்யதேசமுமாகும். இச்சன்னதியில் மூலவர் பெருமாள் த்ரிவிக்ரம (உலகளந்த) திருக்கோலத்தில் காட்சி கொடுக்கிறார். இந்த க்ஷேத்திரத்தில் பெருமாள்,முதலாழ்வார்கள் மற்றும் ம்ருகண்டு மகரிஷிக்கு ப்ரத்யக்ஷ்மாக த்ரிவிக்ரம திருக்கோலத்தில் ஸேவை கொடுத்துள்ளார். இத்திருக்கோயில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது. இத்திருக்கோயிலில் பெருமாளுக்கு ப்ரம்மோத்ஸவம் பங்குனி மாதம் கொடியேற்றதுடன் பத்து நாள் விசேஷமாக நடைபெறும். மார்க்கண்டேயர் பிறந்த ஸ்தலம்.